இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை


இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 14 April 2021 4:10 PM GMT (Updated: 14 April 2021 4:10 PM GMT)

திருப்பூர், அவினாசி பகுதியில் பலத்த காற்றோடு, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திருப்பூர்
திருப்பூர், அவினாசி  பகுதியில் பலத்த காற்றோடு, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 
இடி, மின்னலுடன் மழை 
திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தியது. ஒரு சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் வெயில் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். சூட்டில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள் பழங்களை வாங்கி சாப்பிட்டனர். இந்த நிலையில்  நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலை குளிர்ந்த காற்று வீசியது. 
இரவு 7 மணி அளவில் திருப்பூரில் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
மின்தடை
 திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம், ஸ்ரீசக்தி சக்தி தியேட்டர் ரோடு பகுதிகளில் மழைநீர் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பெரிச்சிப்பாளையம், அணைப்பாளையம், தென்னம்பாளையம், காந்திநகர், டவுன்ஹால், வாலிபாளையம், மண்ணரை, பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக தெருவோர தள்ளுவண்டி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
அவினாசி
அதே போல் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் கடும் வெப்பம் வாட்டி எடுத்தது. மாலை 6 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. இரவு 7.15 மணிக்கு சூறாவளி காற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அவினாசி ஆட்டையம்பாளையம், வெள்ளியம்பாளையம், நம்பியம்பாளையம், சுண்டக்காம்பாளையம்| கருவலூர்  உப்பிலிபாளையம், ராமநாதபுரம், காசிகவுண்டன்புதூர், கருணை பாளையம், வேலாயுதம்பாளையம்| அவினாசிலிங்கம்பாளையம், பழங்கரை, துளுக்கமுதுர், ராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  2 மணி நேரம் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் ரோட்டில் பல இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.  மழை பெய்ததால் பூமி குளிர்ச்சி அடைந்தது. விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்
மின்தடை
இதற்கிடையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அவினாசி இஸ்மாயில் வீதி நாலு ரோடு சந்திப்பில் இருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்து நிலையில் நின்றது. இதனால் அதிலிருந்து செல்லும் மின்சார வயர்கள் ரோட்டில் தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது அவினாசியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சுமார் 2 மணி நேரம் அவினாசி பகுதி முழுவதும் மின் சப்ளை தடைபட்டது. இதனால் அவினாசி நகரம் இருளில் மூழ்கியது.

சேவூர்
சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் தொடர்ந்து ஒரு மணி நேரமாகமழை பெய்தது. இதில் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்பட பல கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. பலத்த இடி, மின்னலால் 1 மணி நேரத்திற்கு மேலாக சேவூர் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

----
திருப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழையால்,  காலேஜ் ரோட்டில் கார் ஒன்று மெதுவாக சென்றதை படத்தில் காணலாம்.
------------
அவினாசியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் இருப்பதையும், மின்சார வயர்கள் தாழ்வாக தொங்குவதையும் படத்தில் காணலாம். 
--

Next Story