விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்-பெற்றோர் கடும் எதிர்ப்பு
மதுரை மாவட்டத்தில் விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
மதுரை
மதுரை மாவட்டத்தில் விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவ, மாணவிகளுக்கு கற்றல் ஆர்வம், பாடங்களின் மீதான அக்கறை குறைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசு விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. அதாவது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கி வருகின்றனர். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் கண்டிப்புடன் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் புகார்
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறும்போது, அரசுப்பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து தேர்வுகளும் நடத்துகின்றனர். இந்த நடைமுறை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆரம்பக்கல்வியை படிப்பவர்களுக்கும் பின்பற்றப்படுகிறது. இதுதவிர, அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் நடத்துகின்றனர்.
11-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த பின்னரும், பள்ளிகள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பில் சேர்த்துக்கொள்வதாக மிரட்டுகின்றனர் என தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது:-
அரசு உத்தரவின்படி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவ-மாணவிகளுக்கு நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது. அத்துடன் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் தேர்வு நடத்தக் கூடாது. அவ்வாறு தேர்வுகள் நடத்துவது குறித்து புகார் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளுக்கு இந்த பிரச்சினையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story