அறச்சலூர் அருகே பயங்கரம் 95 வயது மூதாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது


அறச்சலூர் அருகே பயங்கரம் 95 வயது மூதாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது
x
தினத்தந்தி 15 April 2021 1:54 AM IST (Updated: 15 April 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அருகே 95 வயது மூதாட்டியை வெட்டிக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

அறச்சலூர்
அறச்சலூர் அருகே 95 வயது மூதாட்டியை வெட்டிக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுகுடிக்க பணம்
அறச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை பாரதி வீதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய தாய் காளியம்மாள் (வயது 95). மனைவி ஜெலின் மேரி. மகன் பாரதிபூவிழி செல்வன் (33). 
முத்துசாமி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிபூவிழி செல்வன் கட்டிட வேலைக்கு சென்றுவந்தார். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் தங்கி அங்குள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்தார். பிறகு சற்று மனநலம் பாதித்ததால் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாரதிபூவிழி செல்வன் கோவையில் இருந்து அவல்பூந்துறையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மதுகுடிக்க பணம் கேட்டு தாய் ஜெலின்மேரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தரமுடியாது என்று ஜெலின்மேரி கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். 
அரிவாள் வெட்டு
அப்போது வீட்டுக்குள் முத்துசாமியும், காளியம்மாளும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். தாய் மதுகுடிக்க பணம் தராத ஆத்திரத்தில் இருந்த பாரதிபூவிழி செல்வன் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த அரிவாளை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த காளியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். 
சத்தம்கேட்டு எழுந்த முத்துசாமி அய்யோ அம்மா என்று அலறி துடித்தார். அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். பின்னர் அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பாரதிபூவிழி செல்வனை கைது செய்தார்கள்.  
பரபரப்பு
பின்னர் காளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மதுகுடிக்க தாய் பணம் தரவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பாரதிபூவிழி செல்வன் ஏன் பாட்டியை வெட்டிக்கொன்றார்?, மனநல பாதிப்பில் செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?  என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
95 வயது பாட்டியை பேரனே வெட்டிக்கொலை செய்தது அறச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story