சாத்தனூர்; ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


சாத்தனூர்; ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 15 April 2021 12:05 PM GMT (Updated: 15 April 2021 12:05 PM GMT)

சாத்தனூர் அருகே மொபட்டில் சென்ற ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர்.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகில் உள்ள வீராணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சகாதேவன் (வயது 45), அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவரின் மனைவி சுமதி (41). அவர்கள் சாத்தனூர் அணையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். 

13-ந்தேதி இரவு 7.30 மணியளவில் ஓட்டலை சாத்தி விட்டு, அங்கிருந்து சுமதி தனியாக மொபட்டில் வீட்டுக்குப் புறப்பட்டார். அவரை, பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் ஹெல்ெமட் அணிந்து 2 பேர் வந்தனர். அந்தேரி ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென அவர்கள் சுமதியை வழிமறித்தனர். 

அவர் நின்றதும் இருவரில் ஒருவர் சுமதியிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, திடீரென சுமதியை கீழே தள்ளிவிட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். 

கீழே விழுந்த சுமதிக்கு காயம் ஏற்பட்டது.அவர் எழுந்து திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு அலறினார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக  சேர்த்தனர்.

இதுகுறித்து சுமதி சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story