தேனியில் செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் உடல் உபாதைகளை உருவாக்கும் மாம்பழங்கள்


தேனியில் செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் உடல் உபாதைகளை உருவாக்கும் மாம்பழங்கள்
x
தினத்தந்தி 19 April 2021 5:20 PM GMT (Updated: 19 April 2021 5:20 PM GMT)

தேனியில் ரசாயன கற்களை பயன்படுத்தியும், ரசாயன மருந்து தெளித்தும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் உருவாகின்றன. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி: 

மாம்பழ சீசன்
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, அல்லிநகரம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. 

இந்த பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். அதன்படி தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது.


சந்தைகளுக்கு மாம்பழம் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ மாம்பழம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இயற்கையாக பழுக்கும் மாம்பழம் மற்றும் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கு மணமும், சுவையும் அதிகம். ஆனால், தேனி நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சந்தைகள், கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழம் மணமும், சுவையும் குறைந்து காணப்படுகிறது.

 பார்ப்பதற்கு கவரும் வகையில் பழங்கள் இருந்தாலும், அவற்றில் சுவையில்லை.

செயற்கை முறை
மேலும் இத்தகைய மாம்பழங்களை சாப்பிடும் மக்களுக்கு வயிறு வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். 

இவை ரசாயன கற்கள் வைத்தும், ரசாயன மருந்துகளை தெளித்தும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில், ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

எனவே, தேனி மாவட்டத்தில் ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதை தடுக்கவும், இத்தகையை செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story