நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
x
தினத்தந்தி 19 April 2021 8:01 PM GMT (Updated: 2021-04-20T01:31:35+05:30)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 86 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்பூசி முகாமுக்கு செல்லும் பொதுமக்கள் மருந்து இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை எனவும், திங்கட்கிழமை (அதாவது நேற்று) தடுப்பூசி வந்து விடும் எனவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு பலர் தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். அங்கு தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி தட்டுப்பாடாக இருப்பதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) வந்து தடுப்பூசி வந்துள்ளதா? என கேட்டு கொள்ளுமாறும், அப்படி வரவில்லை என்றால் அடுத்த கட்டமாக அறிவிப்பு வெளியான பிறகு தடுப்பூசி போட வர வேண்டும் எனவும் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள மருத்துவ ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 2-வது முறையாக தடுப்பூசி போடுவோருக்கு மட்டும் மருந்து கையிருப்பு இருப்பதாகவும், அதனை மட்டும் போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு ஒட்டினர்.

இதுகுறித்து முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் கூறுகையில், "நாங்கள் கடந்த சில நாட்களாக இங்கு தடுப்பூசி போடுவதற்காக வந்தோம். ஆனால் தடுப்பூசி மருந்து இல்லை என்று கூறி எங்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். எங்களிடம் அடிக்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தற்போது தடுப்பூசி இல்லை என்று கூறுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை கொண்டுவந்து போட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Next Story