ஏழைகளின் குளிர்சாதன பெட்டி: சென்னையில் மண்பானைகள் விற்பனை மும்முரம்


ஏழைகளின் குளிர்சாதன பெட்டி: சென்னையில் மண்பானைகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 20 April 2021 2:09 AM GMT (Updated: 2021-04-20T07:39:28+05:30)

சென்னையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கோடையில் குளிர்ந்த நீர் பருக மக்கள் ஆர்வம்.

சென்னை, 

கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை தணிக்கும் வகையில் சாலையோரம் ஜூஸ்-பழச்சாறு கடைகள், கூழ், தர்பூசணி கடைகள் புற்றீசல் போல முளைத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

அந்தவகையில் தற்போது மண்பானைகள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது. என்னதான் கலர் கலராக ஜூஸ், பழச்சாறு அருந்தினாலும் வெயிலில் அலைந்து திரிந்து வீட்டுக்கு வரும்போது, ஆசைதீர குளிர்ந்த நீர் பருகுகையில் ஏற்படும் ஆனந்தமே தனி. வசதியில்லாதவர்கள், ஏழைகளின் குளிர்சாதன பெட்டி எனப்படும் மண்பானைகளில் உள்ள தண்ணீருக்கு ஆசைப்படாதவர்கள் இல்லை எனலாம். மண்ணை நிரப்பி அதன்மீது மண்பானைகள் வைத்து தண்ணீர் ஊற்றி வைத்தால் போதும் சில மணி நேரங்களிலேயே குளிர்ந்த நீராக மாறிவிடும். அந்த வகையில் தற்போது கோடைக்கேற்ற மண்பானைகள் விற்பனை சென்னையில் ஜோராக நடந்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், புரசைவாக்கம், பெரம்பூர் என நகரின் பல பகுதிகளில் மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

ரூ.100 முதல் ரூ.800 வரை வெவ்வேறு அளவுகளில் மண்பானைகள் உள்ளன. கண்களுக்கு விருந்தாக வண்ணமிடப்பட்ட மண்பானைகளும் உள்ளன. இதுதவிர தயிர் ஜாடி, டம்ளர்கள், ஜார்கள் என பல்வேறு வகைகளில் மண்பாண்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

Next Story