கொரோனா ஊரடங்கு எதிரொலி: திருச்சி முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்


கொரோனா ஊரடங்கு எதிரொலி:  திருச்சி முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்
x
தினத்தந்தி 20 April 2021 7:24 PM GMT (Updated: 20 April 2021 7:24 PM GMT)

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக திருச்சி முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடப்பட்டது.

திருச்சி:
கொரோனா ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள் காலவரையின்றி மூட அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கொம்பு மூடல்
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடப்பட்டது. இதேபோலம் திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணை சுற்றுலா மையம் நேற்று முதல் மூடப்பட்டது. கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறு பிரியும் இந்த மேலணை சுற்றுலா பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். முக்கொம்பு சுற்றுலா மையம் நுழைவு வாயிலில் சவுக்கு கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மேலும் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் சார்பில், முக்கொம்பு சுற்றுலா மையம் அரசின் மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக பார்வையாளர்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிளக்ஸ் பேனரில் அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத்தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வண்ணத்துப்பூச்சி பூங்கா
இதுபோல திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா அரசின் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவை பார்வையிட சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகரிலும் தடை
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் நேற்று முதல் மூடப்பட்டன. அத்துடன் சாலையோரங்களில் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன.

Next Story