திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு
திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு கொடுத்தார்.
திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு கொடுத்தார்.
புகார் மனு
பெருந்துறை அருகே உள்ள குட்டை தயிர்பாளையம் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி முருகேசன் (வயது 37) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது பெற்றோர் எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். அப்போது எனது உறவினர் ஒருவரும், அவரது மனைவியும் என்னை அணுகி, எங்களது உறவுக்கார பெண் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரை பேசி முடித்து விடலாம் என்றும் என்னிடம் கூறினர்.
அதனால் நான் எனது தாய் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு அவினாசி பகுதியில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். பெண்ணை என்னிடம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது அவர்கள் பெண்ணின் உறவினர் என்று கூறி மேலும் சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
திருமணம்
இதைத்தொடர்ந்து ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பேரோடு மாரியம்மன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. அதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எனது உறவினர், அவரது மனைவி மற்றும் பெண்ணின் உறவினர்கள் வாங்கி கொண்டனர்.
திருமணத்தின் போது எனது மனைவிக்கு நான் ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை போட்டேன். எனது மனைவி என்னுடன் ஒரு வாரம் மட்டும் குடும்பம் நடத்தினார். மறு அழைப்பிற்காக கோவையில் உள்ள என் மனைவியின் சித்தி வீட்டுக்கு என்னை அழைத்ததின் பேரில் என் மனைவியுடன் சென்றேன்.
மோசடி
இதைத்தொடர்ந்து எனது மனைவி அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அதனால் நான் அவரை பல்லடம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். என் மனைவி 4 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருகிறேன் என்றார். ஆனால் அவர் கூறியபடி வீட்டுக்கு வரவில்லை. அதனால் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நான் கோவையில் உள்ள எனது மனைவியின் சித்தி வீட்டிற்கு சென்று விசாரித்தேன். அப்போது அவர் எனது மனைவின் சித்தி இல்லை என்பதும், அவர் ஒரு புரோக்கர் என்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர்கள் அனைவரும் திருமணமாகாத வாலிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்ததும் தெரிய வந்தது. என்னுடைய மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் இதே போன்று ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதாகவும், தற்போது 4-வது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கேள்விப்பட்டேன்.
என்னை நம்ப வைத்து கூட்டு சதி செய்து என்னிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும், ஒரு பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றி மோசடி செய்து உள்ளார்கள். எனவே என்னை ஏமாற்றிய எனது மனைவி மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் நகையை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
Related Tags :
Next Story