தஞ்சை மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலானது. கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலானது. கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இரவு நேர ஊரடங்கு அமல்
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. முக கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒருபுறமும், தடுப்பூசி போடும் பணிகள் இன்னொரு புறமும் என அனைத்து களத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) அரசு முடிவு எடுத்தது. இதற்கான வழிகாட்டு நடைமுறைகளையும் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
சாலைகள் மூடல்
இரவு நேர ஊரடங்கையொட்டி தஞ்சை மாநகரில் உள்ள காந்திஜி சாலை, கீழவாசல், தெற்கு அலங்கம், தெற்கு வீதி, நாஞ்சிக்கோட்டை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, வல்லம் நம்பர்-1 சாலை உள்பட முக்கிய சாலைகளான தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.
இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. வாகன இரைச்சல் இன்றி, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் ஆள் அரவமின்றி மாறின. சாலைகளில் திரிந்த வாலிபர்கள் சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். சிலர் தங்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு இரவு பணிகளுக்கு புறப்பட்டனர். மருந்தகங்களுக்கு செல்வோர் உள்பட அவசர தேவைகளுக்காக செல்வோரை விசாரித்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.
கடைகள் அடைப்பு
இரவு நேர ஊரடங்கையொட்டி நேற்று இரவு 9 மணிக்கே வியாபாரிகள் கடைகளை அடைக்க தொடங்கினர். இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க்குகள், மருந்தகங்கள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன. இப்படி அத்தியாவசிய பணிகள் தவிர இதர அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய பெரியகோவில் சாலை, மேம்பாலம், மருத்துவக்கல்லூரி சாலை, நாகை சாலை உள்பட அனைத்து சாலைகளும் வாகன இயக்கம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்டாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருச்சிக்கு கடைசி பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படாததால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கே நள்ளிரவு நேர அமைதியை காண முடிந்தது.
போலீசார் தீவிர கண்காணிப்பு
சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று அமைதியாகவே காட்சி தந்தன. சாலைகளில் ஆங்காங்கே நடமாடும் டீக்கடைகளும் நேற்றைய இரவில் காணவில்லை.
இரவு ஊரடங்கையொட்டி, தஞ்சை நகரை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் எந்தவிதமான வாகனங்களும் செல்ல அனுமதி கிடையாது என்பதால் ஊரடங்கை மீறி வருபவர்களை தடுத்து நிறுத்த இரவு நேரத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்டத்தில் 89 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் இனிமேல் இதுபோன்று வந்தால் அபராதம் விதிப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டையில் நேற்று சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு தொடங்கியதால் நேற்று இரவு 7 மணி முதலே கடை தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அய்யம்பேட்டை மதகடி பஜார், சாவடி பஜார், பஸ் நிறுத்தம் பகுதிகளில் இரவு 8 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மாலை முதல் குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே சென்று வந்தன. இதிலும் ஒரு சில பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். வேலைக்கு சென்று திரும்பியவர்களும் அவசரம், அவசரமாக தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாபநாசம்
பாபநாசம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையங்களில் வழக்கமான கூட்டம் இல்லை. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இரவுநேர பொது முடக்கம் நடைமுறைக்கு வந்ததால் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் பஸ்களில் எதிர்பார்த்த பயணிகள் கூட்டம் இல்லை.
Related Tags :
Next Story