மாவட்ட செய்திகள்

காசிமேடு பகுதியில் பரபரப்பு வாலிபரை அடித்து கொன்று உடலை மணலில் புதைத்த நண்பர்கள் + "||" + Friends who killed a rioter in the Kasimedu area and buried his body in the sand

காசிமேடு பகுதியில் பரபரப்பு வாலிபரை அடித்து கொன்று உடலை மணலில் புதைத்த நண்பர்கள்

காசிமேடு பகுதியில் பரபரப்பு வாலிபரை அடித்து கொன்று உடலை மணலில் புதைத்த நண்பர்கள்
குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொன்று கடற்கரை மணலில் புதைத்து வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசில் சரண் அடைய போவதாக கூறிய ஆத்திரத்தில் கொன்றது தெரிந்தது.
திருவொற்றியூர், 

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்புனு என்ற செல்வராஜ் (வயது 24). இவர், தன்னுடைய நண்பர்களான ராயபுரம் ஜி.எம். பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ் (21), நிசாந்தன் (25), எண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகியோருடன் சென்று எண்ணூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் கடந்த 14-ந்தேதி வீட்டு வேலைக்கு துளைபோடும் எந்திரத்தை வாடகைக்கு கேட்டார்.

அவர் கொடுக்க மறுத்ததால் 5 பேரும் சேர்ந்து அவரை அடித்தனர். இதுதொடர்பாக லோகேஷ் அளித்த புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 5 பேரையும் தேடி வந்தனர்.

அடித்துக்கொலை

போலீஸ் தேடுவதை அறிந்த 5 பேரும் காசிமேடு ஜீரோ கேட் பகுதியில் தலைமறைவாக இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அப்புனு, தான் எண்ணூர் போலீசில் சரண் அடையப்போவதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அப்புனுவை பீர்பாட்டில் மற்றும் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, அதே பகுதியில் கடற்கரை மணலில் உடலை புதைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் அப்புனுவின் பெற்றோர், தங்கள் மகன் எங்கே? என்று இவர்கள் 4 பேரிடமும் கேட்டு வந்தனர். இதற்கிடையில் நேற்று காசிமேடு ஜீரோ கேட் பகுதியில் மணலில் புதைக்கப்பட்ட அப்புனுவின் உடலை நாய்கள் வெளியே எடுத்து கடித்து குதறின.

4 பேர் கைது

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து சென்று, அப்புனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த 4 பேரும் திருவொற்றியூர் கோர்ட்டில் சரண் அடைய சென்றனர். உடனடியாக காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் குடிபோதையில் இருந்தபோது அப்புனு, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைவதாக கூறியதால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்று விட்டு உடலை மணலில் புதைத்து விட்டோம் என்று கூறினர். இதையடுத்து தினேஷ், முத்தமிழ், நிசாந்தன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.