சிக்னல்களில் விளக்குகள் ஒளிராததால் வாகன ஓட்டிகள் அவதி


சிக்னல்களில் விளக்குகள் ஒளிராததால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 22 April 2021 6:32 PM GMT (Updated: 22 April 2021 6:32 PM GMT)

மேட்டுப்பாளையத்தில் உள்ள சிக்னல்களில் விளக்குகள் ஒளிராதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் உள்ள சிக்னல்களில் விளக்குகள் ஒளிராதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

சிக்னல் விளக்குகள் ஒளிரவில்லை 

மேட்டுப்பாளையம் நகரில் ஊட்டி மெயின் ரோடு, அண்ணாஜிராவ் ரோடு, சிறுமுகை ரோடு, காரமடை ரோடு ஆகிய ரோடுகள் வாகன போக்குவரத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 

இங்கு எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும்.  இந்த ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பங்களாமேடு சிக்ஸ் கார்னரில் சிக்னல் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இந்த சிக்னலில் உள்ள விளக்குகள் ஒளிரவில்லை. 

வாகன ஓட்டிகள் அவதி 

இதனால் போலீசார் அங்கு நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இது வாகன ஓட்டிகள் சிலருக்கு தெரியாமல் இருப்பதால், போலீசார் வாகனங்களை நிற்க கைகளை காட்டும்போது செல்லும் நிலை ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கடந்த ஒருவாரமாக இங்குள்ள சிக்னல் செயல்படுவது இல்லை. நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல மேட்டுப்பாளையம் முக்கிய மையமாக இருக்கிறது. தினமும் இங்கு இருந்துதான் காய்கறிகள் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதால், வாகன போக்குவரத்து அதிகம். இதனால் இங்கு சிக்னல் என்பது மிகவும் முக்கிய தேவையில் ஒன்றாக இருக்கிறது.

சரிசெய்ய வேண்டும் 

ஆனால் அந்த சிக்னல் பழுதாகி இருந்த நிலையில் அதை போலீசார் சரிசெய்யாமல் இருப்பதால் சில நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும் சிக்னலை பார்த்து வருபவர்கள் அதை கவனிக்காமல் வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே விரைவில் சிக்னலை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story