கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இ்ந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று கள்ளக்குறிச்சி கடைவீதி, கள்ளக்குறிச்சி-சேலம் சாலை, காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம், திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் மூலம் கொரோனா தொற்று குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவ கிருமிநாசினி வழங்குதல், உடல் வெப்பநிலையை சோதித்தல் போன்ற கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறதா? என கள்ளக்குறிச்சி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.
முக கவசம்
அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் அபாரதம் விதித்தும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக முககவசம் அணிய கடை உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்கள் கொரோனா தொற்று 2-வது அலையை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேவையற்ற பயணங்களை தவிர்த்தும், அத்தியாவசிய தேவை மற்றும் பணிகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும் பட்சத்தில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு கலெக்டர் கிரண்குராலா கூறினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story