கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2021 9:29 PM GMT (Updated: 23 April 2021 9:29 PM GMT)

கீழக்குடிக்காடு கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மங்களமேடு:

முற்றுகையிட சென்றனர்
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 73 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக லெப்பைக்குடிக்காடு அருகில் கீழக்குடிக்காடு கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெப்பைக்குடிக்காடு, பெண்ணக்கோனம், கீழக்குடிக்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, அந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட திரண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து, எறையூர் சர்க்கரை ஆலைக்காக கீழக்குடிக்காடு பகுதியில் இருந்து நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. தற்போது அரசு கொண்டு வர இருக்கும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தால் லெப்பைக்குடிக்காடு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கிராம மக்கள் கூறி, அந்த திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணிகள் நடைபெறாது
இதையடுத்து அவர்களிடம், மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அதுவரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறாது என்றும், தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story