முழு ஊரடங்கு; நெல்லை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள்.
முழு ஊரடங்கு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அம்பை பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் அம்பை மெயின் ரோடு, பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் நவீன எந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளித்தனர். தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களை நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பணகுடி-முக்கூடல்
இதேபோல் பணகுடி பஜாரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. பணகுடி மெயின்ரோடு, நான்கு வழிச்சாலை மற்றும் தெருக்களில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
முக்கூடல் கீழே பெரிய வீதி, மேல பெரிய வீதி மற்றும் ஆலங்குளம் ரோடு வம்பளந்தான்முக்கு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைக்காக மட்டுேம பொதுமக்கள் வெளியே சென்றனர். மற்றவர்கள் வீடுகளில் முடங்கினார்கள்.
வள்ளியூர்-களக்காடு
வள்ளியூர் பஜாரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாகன போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
திசையன்விளை பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அரசு விதி முறைக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் நடந்தது.
களக்காடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அண்ணாசாலை, கோட்டை தெரு, கோவில்பத்து, நாங்குநேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது. ஒரு சில மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோ, கார்கள் இயங்கவில்லை. இதனால் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
நெல்லை பேட்டை மெயின் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இன்றி எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது.
ஆதரவற்றோருக்கு உணவு
நெல்லையில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதியோர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையொட்டி நெல்லை மாநகராட்சி ஆதரவற்றோர் தொண்டு நிறுவனம் மூலம் காலை மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது அவர்கள் வசித்துவரும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பஸ், கார், வேன் போக்குவரத்து நேற்று அடியோடு முடங்கி கிடந்தது. ஆனால் ரெயில் போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு சென்னை, கோவை, பெங்களூரு போன்ற வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட ரெயில்களில் ஏராளமான பயணிகள் வந்து இறங்கினர். அவர்கள் ஆட்டோக்கள் மூலமாகவும், தங்களது சொந்த வாகனங்களிலும் ஊர்களுக்கு சென்றனர். இதுதவிர திருச்சி -திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயிலில் பயணிகள் பயணம் செய்தனர். அவர்களது தொடர் பயணத்துக்கு போலீசார் தடை எதுவும் ஏற்படுத்தவில்லை
Related Tags :
Next Story