புதுக்கோட்டையில் சலூன் கடைகள் அடைப்பு தியேட்டர்கள் மூடல் பூ மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு


புதுக்கோட்டையில் சலூன் கடைகள் அடைப்பு தியேட்டர்கள் மூடல்  பூ மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 26 April 2021 6:35 PM GMT (Updated: 26 April 2021 6:35 PM GMT)

புதுக்கோட்டையில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

புதுக்கோட்டை:
சலூன் கடைகள்
தமிழகத்தில் கொரேனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பெரிய கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நேற்று சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 
ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) இதேபோல ஊரடங்கினால் கடைகள் அடைக்கப்பட்டதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாட்டினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் மூடல்
இதேபோல மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரிய கடைகள், மால்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ஓரிரு கடைகள் மட்டும் இயங்குவதாகவும், அதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொருட்கள் வினியோகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். 
உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டு அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அரசின் மறுஅறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அன்றாட அலுவலக பணிக்காக வெளியூர் செல்பவர்கள் ஓட்டல்களில் உணவினை பார்சல் வாங்கி கொண்டு சாப்பிடுவதில் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்காத காரணத்தினால் நேற்று மாலை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பூங்கா மூடல்
கீரமங்கலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் சுவாமி கோவில் (சிவன்) உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள தடாகத்தின் நடுவில் சுமார் 84 அடி உயரத்தில் சிவன் சிலையும் அதற்கு முன்னால் தலைமைப்புலவர் நக்கீரர் சிலையும் அமைக்கப்பட்டு தடாகத்தின் கரைகளை நடைபாதையாக மாற்றி நடைபயிற்சிக்கும் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர்.
அதே போல கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் சிவன் கோவிலில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் தினசரி அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு நிர்வாகத்தின் சார்பில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் கோவில் முன்பு உள்ள பிரமாண்ட சிவன் சிலையை சுற்றி வரும் பாதை மற்றும் சிறுவர் பூங்காவும் மூடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த கடைகளும் மூடப்பட்டுள்ளது.
டீக்கடைகள் திறக்கவில்லை
கீரமங்கலத்தில் பஸ் நிலையம், சந்தைப் பேட்டை உள்பட பல பகுதிகளிலும் உள்ள தேனீர்கடைகள் திறக்கப்படவில்லை. இது குறித்து டீக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், கீரமங்கலத்தில் பெரும்பாலும் கடைகளின் நின்றே வாடிக்கையாளர்கள் டீ அருந்துவது வழக்கம். அதாவது காலை நேரங்களில் காய்கனி மற்றும் பூ கமிஷன் கடைகளுக்கு வரும் விவசாயிகளே எங்கள் வாடிக்கையாளர்கள். அவர்கள் கடைகளில் நின்று டீ அருந்த அனுமதி இல்லை என்பதாலும் பார்சல்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளதால் டீக்கடைகளை திறக்கவில்லை என்றனர். இதனால் நேற்று கீரமங்கலம் பகுதியில் டீ கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி பகுதியில் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஏதும் இல்லை. இதனால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்பதால் சில ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஓட்டல்களில் பார்சல் வாங்கிய பயணிகள் அதை அமர்ந்து சாப்பிட வசதி இன்றி தடுமாறினர். வெட்ட வெளியில் நின்றபடி உணவு சாப்பிட்டதை காணமுடிந்தது. எனவே சமூக இடைவெளியுடன் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என வெளியூர் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளிலும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அதை அருந்துவதற்கான இடத்தை தேடி அலைந்தனர்.
வழிபாட்டு தலங்கள் மூடல்
அன்னவாசல் ஒன்றியம், இருந்திராபட்டி ஊராட்சி திம்மயம்பட்டியில் 42 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி சார்பில் திம்மயம்பட்டி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. திம்மயம்பட்டி குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் முககவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் சுகாதார ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கிராமங்கள் முழுவதும் கிருமிநாசினி தொளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், வீரடிவிநாயகர்கோவில்கள் மூடப்பட்டன. 
டாஸ்மாக் பார்கள் மூடல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், எப்.எல்.3 உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் அரசு மதுக்கூடங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. மேற்படி உத்தரவினை மீறி செயல்பட்டால் அரசு மதுக்கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story