நேரக்கட்டுப்பாடு விதித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை


நேரக்கட்டுப்பாடு விதித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 April 2021 1:25 AM IST (Updated: 27 April 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

நேரக்கட்டுப்பாடு விதித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தென்காசி, ஏப்:
நிவாரண உதவிகள் கூட தேவையில்லை என்றும், நேரக் கட்டுப்பாடுகள் விதித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி மாவட்ட கலெக்டரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

சலூன் கடைகள் அடைப்பு

தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சலூன் கடை களை அடைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று தென்காசி மாவட்டத்தில் 1,750 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் தென்காசி நகர மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பண்டார சிவன், நகர துணைத் தலைவர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ராஜா முருகன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

திறக்க அனுமதிக்க வேண்டும்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் 6 மாதங்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டனர். கடன் தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. நிவாரண உதவியாக அரசு அறிவித்த 2,000 ரூபாய் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் தற்போது மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே நோய்தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணி செய்வோம் என உறுதி அளிக்கிறோம். நிவாரண உதவிகள் கூட தேவையில்லை. நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடைகளை திறக்க அனுமதியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மனு

இதேபோன்று தென்காசி நகர ஹேர்ஸ்டைல் யூனியன் சார்பில் நகர தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சபாபதி, பொருளாளர், பாலா, மாவட்ட அவைத்தலைவர் சம்போ முருகன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், “கட்டுப்பாடுகளை விதித்து கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்”் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story