சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 27 April 2021 1:28 AM IST (Updated: 27 April 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.

வத்திராயிருப்பு, 
சித்ரா பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.  
சாமி தரிசனம் 
 வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 
இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதம் பவுர்ணமி மற்றும் பிரதோஷத்திற்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு பூஜை 
தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் கலெக்டர் கண்ணன், அனுமதியை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.  நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 6 மணிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் இன்றி பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேர்த்திக்கடன் 
 வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்கள் தாணிப்பாறை பகுதியில் பொங்கலிட்டு, மொட்டைபோட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
மலை ஏறி செல்ல அனுமதி இல்லாததால் வனத்துறை கேட்டின் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story