வனக்கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட வினோத திருவிழா


வனக்கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட வினோத திருவிழா
x
தினத்தந்தி 28 April 2021 1:14 AM IST (Updated: 28 April 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே வனக்கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. இதில் பக்தர்கள் ஆடுகள் பலியிட்டு, நேர்த்திக்கடனாக வீச்சரிவாள் செலுத்தி வழிபட்டனர்.

தா.பழூர்:

பெண்களுக்கு அனுமதி இல்லை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுக்குள் ஆயி, அய்யன் கோவில் உள்ளது. இந்த வனக்கோவிலில் மூலவராக ஆயி, அய்யாவும், பரிவார தெய்வங்களாக ஆகாயவீரன், பாதாளவீரன், நாச்சியார் அம்மன் மற்றும் குதிரைகள் ஆகிய தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் உள்ள குதிரை சிலைகளில் ஒன்று, முற்காலத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவர் குதிரையில் வந்தபோது கோவில் சுதை குதிரை சிற்பம் கனைத்ததால், அங்கு நின்று சிலையானதாக நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் எப்போதும் பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் சுமார் 600 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கோவிலில் திருவிழா மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
திருவிழா
இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதற்கு பின்னர் தற்போது திங்கட்கிழமையும், சித்ரா பவுர்ணமியும் சேர்ந்து வந்ததை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இக்கோவிலில் விடியும்வரை கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே திருவிழா நடைபெற்றது. இங்கு விளக்குகள் ஏற்றி வழிபடுவது இல்லை. கடந்த 60 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே இந்த திருவிழா நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் இங்கு உருவாக காரணமாக இருந்த தஞ்சை மாவட்டத்தின் கஞ்சனூர் பகுதி மறலாளிகளுக்கு முதல் பூஜை உரிமை வழங்கப்பட்டது.
நேர்த்திக்கடன் செலுத்தினர்
அவர்களை தொடர்ந்து அண்ணங்காரம்பேட்டை, சென்னை, திருச்சி, சேலம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மறலாளிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன. ஆலய மணிகள், வீச்சரிவாள் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் சமூக இடைவெளியோடு முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இதற்கடுத்து இந்த கோவிலின் திருவிழா 2028-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறும்.

Next Story