வளர்ப்பு நாயையும் அரசு பஸ்சில் அழைத்து சென்ற மூதாட்டி; டிரைவரிடம் கெஞ்சி அனுமதி வாங்கினார்
ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்லும் போது வளர்ப்பு நாயையும் அரசு பஸ்சில் மூதாட்டி அழைத்து சென்றார். டிரைவரிடம் கெஞ்சி அந்த நாயை அவர் பஸ்சில் தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்லும் போது வளர்ப்பு நாயையும் அரசு பஸ்சில் மூதாட்டி அழைத்து சென்றார். டிரைவரிடம் கெஞ்சி அந்த நாயை அவர் பஸ்சில் தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சொந்த ஊருக்கு நாயுடன்...
கொரோனா பரவல் காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கை கர்நாடக அரசு அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் வசிக்கும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்து சென்றார்கள். இந்த நிலையில், மூதாட்டி ஒருவர் தான் வளர்த்து வரும் செல்ல நாயுடன் அரசு பஸ்சில் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
அடம் பிடித்த மூதாட்டி
பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்திற்கு வளர்ப்பு நாயுடன் அந்த மூதாட்டி வந்திருந்தார். அந்த நாயுடன் சொந்த ஊருக்கு செல்ல பஸ்சில் ஏறி அவர் அமர்ந்திருந்தார். இதை பார்த்த டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தனர். நாயை பஸ்சில் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்று மூதாட்டியிடம் டிரைவர் கூறினார். ஆனால் தன்னுடைய நாயுடன் தான் பஸ்சில் வருவேன், இல்லையெனில் நானும் இறங்கி விடுவேன் என்று மூதாட்டி கூறினார்.
அந்த மூதாட்டியை நாயை விட்டுவிட்டு பஸ்சில் ஏறும்படி டிரைவரும், கண்டக்டரும் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் வளர்ப்பு நாயுடன் தான் பஸ்சில் வருவேன் என்று மூதாட்டியும் அடம் பிடித்தார். பின்னர் வளர்ப்பு நாயுடன் பஸ்சில் மூதாட்டி செல்வதற்கு டிரைவரும் ஒருவழியாக அனுமதி அளித்தார். இதன் காரணமாக தனது வளர்ப்பு நாயுடன் அந்த மூதாட்டி சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story