கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 28 April 2021 11:13 PM IST (Updated: 28 April 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் 100 வாழைகள் நாசமானது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் 100 வாழைகள் நாசமானது. 

கல்லாறு பழப்பண்ணை 

மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே மலையடிவாரத்தில் அரசு தோட்டக் கலை பண்ணை (கல்லாறு பழப்பண்ணை) உள்ளது.

 8.92 எக்டர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் பல்வேறு வகையான பழ மரங்கள், வாசனை திரவிய பயிர்கள், அலங்கார செடிகள், பலவகை யான நாற்றுகள் உள்ளன. 

மேலும் இங்கு ஏராளமான வாழைகளும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த பண்ணை மலையடிவாரத்தில் உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.

காட்டு யானைகள் அட்டகாசம் 

அதன்படி  இங்கு புகுந்த காட்டு யானைகள், மரங்களில் பழுத்து தொங்கிய பலாப்பழங்களை பறித்து சாப்பிட்டது. பின்னர் அவை அங்கு சாகுபடி செய்து இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.

இதில் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. அங்கு ஊழியர்கள் சென்று பார்த்தபோது வாழைகள் நாசமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தடுக்க நடவடிக்கை 

இங்கு காட்டு யானைகள் உள்ளே வருவதை தடுக்க சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் காட்டு யானைகள் உள்ளே புகுந்து விடுகின்றன. 

அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், இந்த பண்ணைக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 


Next Story