கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2021 6:12 PM GMT (Updated: 29 April 2021 6:12 PM GMT)

ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

பொள்ளாச்சி

ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேரை கைது செய்தனர். 

போலீசார் கண்காணிப்பு 

பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இங்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச்சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த கடத்தலை தடுக்க பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ரகசிய தகவல் 

இந்த நிலையில் ஆனைமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் ஆனைமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெரிய பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 3 பேர் ஒரு டெம்போ வேனில் ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அந்த டெம்போ வேனுக்குள் சோதனை செய்தபோது, அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. 

4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், ஆனைமலை காந்திநகர் தெருவை சேர்ந்த ரபீக் (வயது 39), பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்த முகமது ரபீக் (29) மற்றும் அரசு பஸ் கண்டக்டரான ஆனைமலை-பொள்ளாச்சி மெயின்ரோட்டை சேர்ந்த பகிபுல்லா (44) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ததுடன், 4½ டன் ரேஷன் அரிசி, டெம்போ வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர் போலீசார் அந்த 3 பேர் மற்றும் ரேஷன் அரிசி, டெம்போ வேன், இருசக்கர வாகனங்களை பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story