மதுரை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்கக்கோரி வழக்கு
மதுரை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்கக்கோரி வழக்கு
மதுரை
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வர்த்தகரீதியாக தென் மாவட்டங்களில் பல முன்னேற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மதுரை மாநகராட்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. மேலும் நகர்ப்புற திட்ட குழு 1971-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் திட்டத்தை அமைத்தது. ஆனால் நகர்ப்புற திட்ட குழு ஒவ்வொரு 5 வருடத்திற்கும் வர்த்தக முன்னேற்றத்திற்கு வசதியாக மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை மாஸ்டர் பிளான் திட்டத்தில் எந்த மாற்றமும் இன்றி உள்ளது. இதனால் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள் அனைத்தும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றன.
மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி மதுரை மாநகராட்சி செயல்பட்டால் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள ஊர்களும் முன்னேற்றம் அடையும். மேலும் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும். வர்த்தக அளவில் தென் மாவட்டங்களில் இருந்து எளிதில் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியும். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை மாஸ்டர் பிளானை நகர்ப்புற திட்ட விதியை பின்பற்றி மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story