பா.ஜனதா எம்.பி. கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் வாங்கியது எப்படி? மும்பை ஐகோர்ட்டு கேள்வி


பா.ஜனதா எம்.பி. கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் வாங்கியது எப்படி? மும்பை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 30 April 2021 12:00 AM GMT (Updated: 30 April 2021 12:00 AM GMT)

பா.ஜனதா எம்.பி. சுஜய் விகே பாட்டீல் கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்கியது எப்படி? என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

ஐகோர்ட்டு கேள்வி

அகமதுநகர் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜனதாவை சேர்ந்த சுஜய் விகே பாட்டீல். நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சுஜய் விகே பாட்டீல் சட்டவிரோதமாக டெல்லியில் இருந்து 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து வாங்கி அகமதுநகரில் வினியோகம் செய்தது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ரவீந்திர குகே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘‘ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து வழங்கப்பட்டு இருக்க வேண்டும். சுஜய் விகே பாட்டீல், எப்படி மருந்தை வாங்கினார் என்பது எங்களுக்கு தெரியவேண்டும். இந்த மனிதர் எப்படி அதிகாரபூர்வமில்லாமலும், கள்ளத்தனமாகவும் ரெம்டெசிவிரை வாங்கினார்?’’ என கேள்வி எழுப்பினர்.

முதன்மை செயலாளருக்கு உத்தரவு

மேலும் ஏப்ரல் 10 முதல் 25-ந் தேதி வரை ஷீரடி விமான நிலையத்தில் வந்து, சென்ற தனி விமானங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யுமாறு மாநில உள்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை மே 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சுஜய் விகே பாட்டீல் டெல்லியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை தனி விமானத்தில் கொண்டு வந்ததாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story