ரோட்டில் உலா வந்த 4 காட்டு யானைகள்


ரோட்டில் உலா வந்த 4 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 30 April 2021 8:18 PM GMT (Updated: 30 April 2021 8:29 PM GMT)

சிறுமுகை - சத்தி ரோட்டில் உலா வந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

மேட்டுப்பாளையம்,

கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் காட்டு யானைகள் உள்பட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரத்தில் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் இருந்து வெளியே வந்து கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
 
இந்த நிலையில் சிறுமுகையில் உள்ள விஸ்கோஸ் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. எனவே அந்த இடம் யானைகளின் கூடாரமாக மாறிவிட்டது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் விஸ்கோஸ் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 4 காட்டு யானைகள் வெளியே வந்தன. அவை, சிறுமுகை - சத்தி மெயின் ரோட்டை கடந்து எதிரே பராமரிப்பின்றி காணப்படும் தொழிற்சாலை குடியிருப்புக்குள் புகுந்தது. முன்னதாக காட்டு யானைகள் ரோட்டில் உலா வந்ததை சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அந்த காட்டு யானைகள் சிறுமுகை - சத்தி மெயின் ரோட்டை கடந்து தொழிற்சாலை வளாகத்துக்குள் சென்றன. 

Next Story