வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 5:01 PM GMT (Updated: 1 May 2021 5:01 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன்  அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் சில நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாரும் எந்தவித வன்முறை செயல்களிலும் ஈடுபடக்கூடாது. 

மீறி வன்முறை செயலில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் முகவர்கள் கண்டிப்பாக செல்போன் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் தங்கள் வாகனங்களை வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வெளிப்புற பகுதியில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு வெற்றி கொண்டாட்டமும் இருக்கக்கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அதன்படி அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களின் முகவர்களும் அமைதியான முறையில் திரும்பிச்செல்ல வேண்டும்.

இடையூறு ஏற்படுத்தக்கூடாது

வாக்கு எண்ணிக்கைக்கு குந்தகம் விளைவித்தாலோ அல்லது பொதுமக்களுக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறை செயலில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முன்னதாக விழுப்புரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கீழ்பெரும்பாக்கம் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில்சென்று ஆய்வு செய்தார்.

வெடிகுண்டு சோதனை

இதேபோல்  திண்டிவனம், மயிலம் சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இதையொட்டி,  திண்டிவனம் தேர்தல் அலுவலரும், சப்-கலெக்டருமான அனு மேற்பார்வையில் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. விழுப்புரத்தில் இருந்து தமிழ் என்கிற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஆய்வின்போது வெடிகுண்டு சோதனை பிரிவு தலைமை காவலர் வேல்முருகன், தனிப்பிரிவு அனந்த நாதன், கோவிந்தராஜ் , மோப்ப நாய் பயிற்சியாளர் சத்யநாராயணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story