ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?


ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
x
தினத்தந்தி 1 May 2021 6:38 PM GMT (Updated: 1 May 2021 6:38 PM GMT)

ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

காரைக்குடி,

ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 பயிற்சி வகுப்பு

காரைக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண்பார்வையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) சோனாவனே (காரைக்குடி), அனில்குமார் (திருப்பத்தூர்), முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் (சிவகங்கை), அனில்பாட்டில் (மானாமதுரை (தனி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் ஓட்டு எண்ணிக்கையின் போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
நடந்து முடிந்த 2021-க்கான சட்ட மன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு எண்ணிக்கை அழகப்பா பொறியியல் கல்லூரி கட்டிடத்திலும், மானாமதுரை (தனி) தொகுதிக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை முருகப்பா அரங்கிலும், சிவகங்கை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

14 மேஜைகள்

இந்த வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணியும், ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் 3மேஜைகள் வீதம் தபால் வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற உள்ளது.
மேலும் ஒவ்வொரு மேஜைக்கும் தாசில்தார் அளவிலான அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் பணியில் அமர்த்தப்பட்டு அவர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணிகள் குறித்து அவ்வப்போது தெரிவித்து வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
 பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள தேர்தல் பணியாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story