அழியாறு அணைக்கு செல்லும் வழிப்பாதை அடைப்பு


அழியாறு அணைக்கு செல்லும் வழிப்பாதை அடைப்பு
x
தினத்தந்தி 3 May 2021 12:14 AM IST (Updated: 3 May 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க மரத்தை சாய்த்து பாதையை அதிகாரிகள் அடைத்தனர்.

பொள்ளாச்சி

ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க மரத்தை சாய்த்து பாதையை அதிகாரிகள் அடைத்தனர்.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு செல்லும் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வால்பாறை ரோட்டில் இருந்து தடையை மீறி அணைக்குள் செல்கின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அணைக்குள் செல்வதை தடுக்க மரத்தை சாய்த்து அந்த பாதையை அடைத்தனர். மேலும் பெரிய அளவில் பள்ளமும் தோண்டி போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

சோதனைச்சாவடி

கொரோனா பாதிப்பை தடுக்க அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து உள்ளது. ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அனைத்து வழிப்பாதைகளும் மூடப்பட்டு உள்ளது. 

சுற்றுலா பயணிகள் அரசின் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க ஆழியாறில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு வனத்துறை, போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறையில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

 சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்ல அனுமதி இல்லை. தேவையில்லாமல் வரும் நபர்களை சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story