முழு ஊரடங்கு; தென்காசியில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு; தென்காசியில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 2 May 2021 10:55 PM GMT (Updated: 2 May 2021 10:55 PM GMT)

முழு ஊரடங்கால் தென்காசி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின.

தென்காசி, மே:
முழு ஊரடங்கு காரணமாக தென்காசி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

தென்காசி

கொரோனா பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தினமும் இரவு  நேர ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மருந்து கடைகள், பால் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பஸ்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின.

தென்காசியில் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இறைச்சி கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் போன்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்ேசாடியது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

பாவூர்சத்திரம்

முழு ஊரடங்கு காரணமாக, பாவூர்சத்திரம் பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களும் இயக்கப்படாததால் நகரம் வெறிச்சோடியது.
பாவூர்சத்திரத்தில் உள்ள மர ஆலைகள், அரிசி ஆலைகள் அனைத்தும் இயங்கவில்லை. இதனால் பாவூர்சத்திரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் ஊரடங்கை மீறி ெவளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார், சுகாதார பணியாளர்கள் அழைத்து சென்று, கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்த சுமார் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

சிவகிரி

முழு ஊரடங்கு காரணமாக, சிவகிரி மெயின் பஜார், பஸ் நிலையம் போன்றவை வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.

செங்கோட்டை

முழு ஊரடங்கால் செங்கோட்டை நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. பஸ், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின. மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேல பஜாரில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
தமிழக-கேரள மாநில எல்லையான செங்கோட்டை அருகே புளியரையில் உள்ள வாகன சோதனைச்சாவடி மூடப்பட்டது. எனினும் அத்தியாவசிய தேவைக்காக உரிய அனுமதிச்சீட்டு பெற்று வாகனங்களில் செல்கிறவர்களை மட்டுமே அனுமதித்தனர். கேரள மாநிலத்தில் இருந்து அனுமதிச்சீட்டு பெற்று வாகனங்களில் வந்தவர்களுக்கு புளியரை சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்களை தமிழகத்துக்குள் அனுமதித்தனர்.

Next Story