மேட்டூர் தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு பா.ம.க. வெற்றி


மேட்டூர் தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு பா.ம.க. வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 1:10 AM GMT (Updated: 3 May 2021 1:10 AM GMT)

கடும் இழுபறிக்கு பிறகு பா.ம.க. வெற்றி

சேலம்:
மேட்டூர் தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து நேற்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் 3 சுற்றுகளில் பா.ம.க வேட்பாளர் சதாசிவம் அதிக வாக்குகள் பெற்று இருந்தார். அதன் பிறகு நடந்த அடுத்தடுத்த சுற்றுகளில் தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசப்பெருமாள், பா.ம.க வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். 27-வது சுற்று முடிவில் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் 89 ஆயிரத்து 853 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் 88 ஆயிரத்து 187 வாக்குகளும் பெற்று இருந்தனர். 2 வேட்பாளர்களுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே வாக்குகள் வித்தியாசம் இருந்ததால் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதை தொடர்ந்து 11 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அனைத்து கட்சிகளின் முகவர்களும் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்பு மேட்டூர் தொகுதியில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் 97 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் 96 ஆயிரத்து 399 வாக்குகள் பெற்றார். இதனால் நீண்ட இழுபறி நீடித்து வந்த மேட்டூர் தொகுதி முடிவுகள் 2 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

Next Story