அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி


அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 1:14 AM GMT (Updated: 3 May 2021 1:14 AM GMT)

கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி பெற்றார். 1 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி

கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வெற்றி பெற்றார். 1 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் தொகுதி

நீலகிரி மாவட்டம் கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் காசிலிங்கம், அ.தி.மு.க. சார்பில் பொன்.ஜெயசீலன், தே.மு.தி.க. சார்பில் யோகேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கேதீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பாபு உள்பட 7 பேர் போட்டியிட்டனர். 

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 92 ஆயிரத்து 366 ஆண்கள், 96 ஆயிரத்து 789 பெண்கள் என 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகி இருந்தது. 67 ஆயிரத்து 398 ஆண்கள், 69 ஆயிரத்து 98 பெண்கள் வாக்களித்தனர். இது 71.39 சதவீதம் ஆகும்.

வாக்குப்பதிவுக்கு பிறகு எந்திரங்கள் பாதுகாப்பாக ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 2,268 தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் 987 வாக்குகள், அ.தி.மு.க. வேட்பாளர் 686 வாக்குகள் பெற்றனர். தொடர்ந்து எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் முன்னிலையில் இருந்தார். 

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

இதற்கிடையில் 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது முகவர்களை அழைக்காமல் நடந்ததாகவும், தபால் வாக்கு எண்ணிக்கையில் 600 வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். 

இதனால் அங்கு ஒரு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் அறையில் ஆய்வு நடத்தி சமரசம் செய்தார். அதன்பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அ.தி.மு.க. வேட்பாளர் பெற்றி

அதன்படி கூடலூர்(தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 64,496 வாக்குகள், தி.மு.க.வேட்பாளர் காசிலிங்கம் 62,551 வாக்குகள் பெற்றனர். இதன் மூலம் தி.மு.க. வேட்பாளரை விட அ.தி.மு.க. வேட்பாளர் 1,945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். பொன். ஜெயசீலன் முதல் முறையாக வெற்றி பெற்று உள்ளார்.

நோட்டாவுக்கு 488 வாக்குகள் பதிவாகி இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7 ஆயிரத்து 317 வாக்குகள் பெற்றார். மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளே பெற்றனர்.


Next Story