இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் காங்கிரசாருக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்


இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் காங்கிரசாருக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 May 2021 10:32 AM GMT (Updated: 3 May 2021 10:32 AM GMT)

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரசாருக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மஸ்கி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் வெற்றி-தோல்வி இரண்டையும் ஒப்புக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தில் இருக்கும் நடைமுறை.

மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கொரோனா நெருக்கடி நிலை உள்ளதால், காங்கிரசார் யாரும் வெற்றியை கொண்டாட வேண்டாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் கட்சியினர் மீது வழக்கு போடுவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

இடைத்தேர்தலில் காங்கிரசுக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்தது. அங்கு 8 கட்டமாக தேர்தலை நடத்தி அந்த பெண் தலைவருக்கு கொடுக்கக்கூடாத தொல்லையை கொடுத்துள்ளனர்.அதனால் கோபம் அடைந்த அந்த மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளனர். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story