பத்லாப்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி உள்பட 5 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


பத்லாப்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி உள்பட 5 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 May 2021 10:59 AM GMT (Updated: 3 May 2021 10:59 AM GMT)

பத்லாப்பூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதி உள்பட 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தானே, 

தானே மாவட்டம் பத்லாப்பூர் டவுண் பகுதியில் உள்ள 7 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணி அளவில் சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் கியாஸ் நிறுவன உழியர் ஒருவரை வரவழைத்து கியாஸ் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அவர் கியாஸ் கசிவை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த தம்பதி மற்றும் 2 குழந்தைகள், ஊழியர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீடும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீக்காயமடைந்த 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுமார் 1 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story