ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 3 May 2021 9:42 PM GMT (Updated: 3 May 2021 9:42 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் 834 படுக்கைகளும், தற்காலிக மையங்களில் 2 ஆயிரத்து 550 படுக்கைகளும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 666 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
5,21,585 பேருக்கு பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 107 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 585 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். 1 லட்சத்து 37 ஆயிரத்து 200 பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாதவர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து, மறுநாளே தடுப்பூசி வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது.
அபராதம்
மேலும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி டாக்டரின் ஆலோசனைகளை பெற வேண்டும்.
பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லையென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களை முககவசம் அணியாமல் அனுமதித்தாலோ அல்லது அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Next Story