வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை


வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 May 2021 11:15 PM GMT (Updated: 3 May 2021 11:15 PM GMT)

முதுமலையில் வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதாகைகள் வைத்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்

முதுமலையில் வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதாகைகள் வைத்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

முதுமலையில் வறட்சி 

கூடலூர், முதுமலை பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. சில சமயங்களில் பரவலாக மழை பெய்கிறது. இருப்பினும் வறட்சியை போக்கும் வகையில் காலநிலை மாறவில்லை. இதனால் புற்கள் காய்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் கூடலூர் அருகே சீனக்கொல்லி பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதில் 1 ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் தீயில் எரிந்தது. 

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் எச்சரிக்கை பதாகைகளை வைத்து உள்ளனர். அதில், வனத்தில் தீ பற்ற வைக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வன உயிரினங்களை பாதுகாப்போம் என்பன போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

துண்டு பிரசுரங்கள்

இது மட்டுமின்றி முதுமலை வனத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை வனப்பகுதியில் வீசக்கூடாது, வனத்துக்கு தீ வைப்பது இந்திய வன உயிரின சட்டத்தின்படி(1972) பெரும் குற்றமாகும் என்று தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பக பகுதியில் இதுவரை காட்டுத்தீ பரவவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கோடைகாலம் முடிவடையும் வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story