ரூ.45 லட்சத்தில் ஆக்சிஜன் டேங்க் அமைக்க தரைத்தளம் கட்டும் பணிகள் மும்முரம்


ரூ.45 லட்சத்தில் ஆக்சிஜன் டேங்க் அமைக்க தரைத்தளம் கட்டும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 4 May 2021 12:59 AM GMT (Updated: 4 May 2021 12:59 AM GMT)

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.45 லட்சத்தில் ஆக்சிஜன் டேங்க் அமைக்க தரைத்தளம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி தெரிவித்தார்.

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.45 லட்சத்தில் ஆக்சிஜன் டேங்க் அமைக்க தரைத்தளம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்று பாதித்த 416 பேர் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 110 படுக்கை வசதிகள் உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

திரவ ஆக்சிஜன்

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாசம் கொடுக்க போதுமான ஆக்சிஜன் உள்ளது. தற்போது 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் டேங்க் உள்ளது. 

இங்கிருந்து மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளுக்கு குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர 154 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. ஒரு சிலிண்டர் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 2 நாளைக்கு ஒருமுறை சிலிண்டர்கள் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டு ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் லாரி மூலம் 1,500 லிட்டர் டேங்கில் திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது. 

தளம் அமைக்கும் பணிகள்

கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் அமைக்க அனுமதி கிடைத்தது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து டேங்க் வந்ததும் கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 லட்சம் செலவில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் அமைப்பதற்காக தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க 4 மீட்டர் உயரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. லாரி உள்ளே வந்து ஆக்சிஜன் நிரப்பும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story