அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் ஜாமீனில் வரமுடியாத கைது நடவடிக்கை


அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் ஜாமீனில் வரமுடியாத கைது நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2021 2:00 PM GMT (Updated: 4 May 2021 2:00 PM GMT)

கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் ஜாமீனில் வர முடியாத கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஊட்டி

கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் ஜாமீனில் வர முடியாத கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காற்று மூலம் பரவ வாய்ப்பு 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், அங்கு வசிக்கும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

 பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும். 
கொரோனா காற்று மூலம் பரவ வாய்ப்பு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தெருக்கள் குறுகலாக இருந்தால், தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 

கடும் நடவடிக்கை

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிகளை மீறிய நபர்களுக்கு அபராதம் விதிக்கும் போது, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 

அவ்வாறு செய்பவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் படி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கருதி ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

1,252 படுக்கைகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். நீலகிரியில் ஆக்சிஜன், ரெம்டிசிவர் தடுப்பு மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ.சி.யூ. வார்டுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. 

இது கவலைக்குரியது. நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளில் 1,252 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 
தற்போது 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 825 படுக்கைகள் காலியாக உள்ளன.  

உடல்வலி, காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தாமதமாக வந்தால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும். 

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story