தூத்துக்குடியில் கொள்ளையர்கள் 5 பேர் கைது


தூத்துக்குடியில் கொள்ளையர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2021 2:51 PM GMT (Updated: 4 May 2021 2:51 PM GMT)

தூத்துக்குடியில் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருட்டு
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடு புகுந்து நகை திருட்டு உள்ளிட்ட தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. 
இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், தலைமை காவலர் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், மணிராஜன், முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
5 பேர் கைது
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடங்களின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 
அப்போது தூத்துக்குடியை சேர்ந்த மரியக்கண் ஜென்ஸ்டன் (வயது 20) மற்றும் 15, 16 வயது மதிக்கத்தக்க 4 சிறுவர்கள் சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது.
இவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு, கால்டுவெல் காலனியில் வீடு புகுந்து 6 பவுன் தங்கசங்கிலி திருட்டு, செல்போன், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட 8 கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 
உடனடியாக தனிப்படை போலீசார் சிறுவர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், 7 செல்போன்கள், ஒரு லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story