கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 May 2021 4:18 PM GMT (Updated: 4 May 2021 4:18 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் காலியாகி விட்டன. இதில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

1½ லட்சம் பேர் தடுப்பூசி

அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சத்து 22 ஆயிரத்து 921 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசி 29 ஆயிரத்து 312 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 1461 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு வந்த நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் 1500-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.

தட்டுப்பாடு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி 7,900 மட்டுமே இருப்பில் உள்ளது. இதில் கோவாக்சின் தடுப்பூசி ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. சில மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லை. ஆனால் தடுப்பூசி போட வரும் பலரும், கோவாக்சின் தடுப்பூசி போடவே விருப்பம் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாட்டால் அவர்களுக்கு போட முடியவில்லை. கடலூர் மாவட்டத்திற்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்குமாறு அரசிடம் கேட்டுள்ளோம். அவை இன்னும் ஓரிரு நாட்களில் வந்ததும், தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்றார்.

Next Story