கோவில், வீடுகளில் கைவரிசை காட்டிய கேரள கொள்ளையன் கைது


கோவில், வீடுகளில் கைவரிசை காட்டிய கேரள கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 4 May 2021 7:05 PM GMT (Updated: 4 May 2021 7:05 PM GMT)

தக்கலை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கோவில், வீடுகளில் கைவரிசை காட்டிய கேரள கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

பத்மநாபபுரம்:
தக்கலை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கோவில், வீடுகளில் கைவரிசை காட்டிய கேரள கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. 

கொள்ளை சம்பவங்கள்

தக்கலை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் கோவில்கள் மற்றும் வீடுகளில் பணம், நகை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தக்கலை துணை சூப்பிரண்டு ராமசந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தக்கலை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாக்கடையை ேசர்ந்த அபிலன்ராஜ் (வயது 38) என்பது ெதரிய வந்தது. இவர் மீது கேரள, குமரியில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2 ஆண்டுகளாக தக்கலை பகுதியில் பூட்டிய வீடு மற்றும் கோவில்களை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். 

காண்டிராக்டர் வீடு

குறிப்பாக தக்கலை அம்மன்கோவில் சந்திப்பு தர்ஹாரோட்டை சேர்ந்த காண்டிராக்டர் முகமது சலீம் (50) வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும், முத்தலக்குறிச்சியை சேர்ந்த ஜெயகுமாரன், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த இக்பால், முத்தல்குறிச்சியில் உள்ள பூச்சிக்காட்டு அம்மன்கோவில், மார்த்தாண்டம் திக்குறிச்சி தூய கபிரியேல் அதிதூதர் ஆலயம் உள்பட 7 இடங்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடித்த பணம் மற்றும் நகையால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின்படி 25 பவுன் ெகாள்ளை நகைகளை போலீசார் மீட்டனர். மேலும், அபிலன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடன் கொள்ளை சம்பவத்தில் வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தக்கலை பகுதியில் பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story