ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2021 7:16 PM GMT (Updated: 4 May 2021 7:16 PM GMT)

கொரோனா பாதிப்பில் குமரி மாவட்டம் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

நாகர்கோவில்:
கொரோனா பாதிப்பில் குமரி மாவட்டம் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

புதிய உச்சம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் அலை பரவலின் போது குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 250 ஆக இருந்தது.
ஆனால் தற்போது பரவிவரும் இரண்டாவது அலையில் குமரி மாவட்டத்தின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 400 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதையும் தாண்டியது.

ஒரே நாளில் 561 பேர் பாதிப்பு

அதாவது ஒரே நாளில் 561 பேர் கொரோனாவால் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத ஒன்றாகும். ஒரே நாளில் 561 பேர் பாதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 561 பேரில் 283 பேர் ஆண்கள் 278 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 35 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாடியில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு கிருமிநாசினி தெளித்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 561 பேருடன் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 123 ஆகும்.

11 பேர் சாவு

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு கடந்த 2-ந் தேதி ஏழு பேர் இறந்தனர்.. நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் 11 பேர் இறந்து இருப்பது குமரி மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும். அவர்கள் விவரம் வருமாறு:-
பள்ளியாடி அருகே உள்ள குட்டி விளையை சேர்ந்த 82 வயது ஆண், சாரல் அருகே உள்ள உரப்பன விளையைச் சேர்ந்த 62 வயது ஆண், நெல்லை மாவட்டம் காரகுளத்தைச் சேர்ந்த 48 வயது ஆண், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 74 வயது ஆண், வெள்ள மடம் சகாய நகரைச் சேர்ந்த 42 வயது ஆண், வடிவீஸ்வரம் மேட்டு தெருவைச் சேர்ந்த 60 வயது ஆண், காவல்கிணறு லெப்பை குடியிருப்பைச் சேர்ந்த 65 வயது பெண், அருவிக்கரை அருகிலுள்ள மாத்தூர் நெடு விளையைச் சேர்ந்த 80 வயது பெண், சாந்தபுரம் வடலிவிளையைச் சேர்ந்த 74 வயது ஆண், பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்த 67 வயது பெண், தெங்கம்புதூர் குளத்துவிளையைச் சேர்ந்த 78 வயது ஆண் ஆகிய 11 பேர் இறந்துள்ளனர். இந்த 11 பேருடன் சேர்த்து குமரிமாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 432 ஆகும்.

Next Story