கோவை ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்


கோவை ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 4 May 2021 9:49 PM GMT (Updated: 4 May 2021 9:49 PM GMT)

கொரோனா அதிகரிப்பு காரணமாக சொந்த ஊர் செல்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

கோவை

கொரோனா அதிகரிப்பு காரணமாக சொந்த ஊர் செல்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, வெட்கிரைண்டர், பிளாஸ்டிக், பம்புசெட், ஆட்டோமொபைல்ஸ் என ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

பெரும்பாலும் பீகார், மராட்டியம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

கொரோனா பரவல் அதிரிப்பு

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது கோவையில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர்

பீகார் மாநிலம் பாட்னா செல்வதற்காக நேற்று மாலை கோவை ரெயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். 

பாட்னா செல்லும் ரெயில் இரவு 9.30 மணிக்கு தான் கோவை ரெயில் நிலையத்திற்கு வரும் ஆனால் இரவு ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லை என்பதால் அந்த ரெயிலில் செல்வதற்காக நேற்று மாலை 5 மணியில் இருந்தே வடமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் பல மணி நேரம் காத்திருந்து ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

Next Story