மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.-5, தி.மு.க.-3; ஈரோடு மாவட்ட தேர்தல் முடிவு யாருக்கு சாதகம் + "||" + election

அ.தி.மு.க.-5, தி.மு.க.-3; ஈரோடு மாவட்ட தேர்தல் முடிவு யாருக்கு சாதகம்

அ.தி.மு.க.-5, தி.மு.க.-3; ஈரோடு மாவட்ட தேர்தல் முடிவு யாருக்கு சாதகம்
அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்று ஈரோடு மாவட்டம் யாருக்கு சாதக நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
ஈரோடு
அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்று ஈரோடு மாவட்டம் யாருக்கு சாதக நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.-5, தி.மு.க.-3 
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி நேரடியாக களத்தில் சந்தித்தன.
பரபரப்பு, இழுபறி, முன்னிலை, பின்தங்கல் என்று பல்வேறு பரபரப்பு காட்சிகளுடன் நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வும், 5 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளன.
இது யாருக்கு சாதகம் என்பதே கேள்வி.
8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று இருப்பதால் அவர்கள் வலுவாக இருக்கிறார்களா என்றால் இல்லை, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் தி.மு.க. 2, காங்கிரஸ் -1 என 3 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
தி.மு.க.வுக்கு வெற்றியா?
ஆனால் தி.மு.க.வுக்கு இது முழுமையான வெற்றியா என்றால் அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், நீலகிரி என 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக கூறப்படும் ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது என்றால், தி.மு.க. மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை என்பதே விடையாக இருக்க முடியும்.
ஜெயலலிதா விசுவாசிகள்
இதுபற்றி அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறும்போது தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அதிகம் இருக்கும் மாவட்டம். அ.தி.மு.க. பிரிந்து ஜெ.அணி தனித்து போட்டியிட்டபோது தி.மு.க., ஜானகி அணி, காங்கிரஸ் கட்சிகளை புறம்தள்ளி ஜெ.அணி அதிகம் தொகுதிகள் வென்றது ஈரோடு மாவட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட தேர்தலுக்கு முன் மற்றும் பின்னர் வெளிவந்த கருத்துக்கணிப்புகளில் பவானிசாகர், மொடக்குறிச்சி தொகுதிகள் தி.மு.க. வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் இந்த 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தந்து இருக்கிறார்கள்.
அதிரடி இல்லை
அதே நேரம் அ.தி.மு.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அடிக்கு பின்னரும் கட்சியில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் என்று 2 மாவட்டங்கள் உள்ளன. தேர்தல் தோல்வியின் போது அதற்கு எந்த மாவட்ட செயலாளரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுவே அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்.
அமைச்சர்கள் மாற்றம் என்று நிர்வாகிகள் மாற்றத்தில் அதிரடி செய்து இருப்பார். அப்படி செய்யும்போது, சட்டமன்ற தேர்தலில் அவர்கள் முழுமையாக கவனம் செலுத்தி இருப்பார்கள். எனவே கட்சியில் உடனடியாக பல மாற்றங்கள் செய்ய வேண்டும். புதிய நிர்வாகிகள், செயல் வீரர்களை தேர்ந்து எடுத்து பதவியில் அமர வைக்க வேண்டும். அப்போதுதான் கட்சி எழுச்சி பெறும்.
தி.மு.க. கூட்டணி வெற்றி
தி.மு.க. தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது தெரிவித்ததாவது:-
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் 3 தேர்தல்களை சந்தித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை வென்று இந்தியாவில் 3 வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை அமர்த்தினார்.
உள்ளாட்சி தேர்தலில் ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அதிகார அத்துமீறல்களையும் சமாளித்து தி.மு.க. கூட்டணியினர் அதிக அளவில் வெற்றி பெறச்செய்தார்.
இப்போது சட்டமன்ற பொதுத்தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க. தனிப் பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இப்படி, தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இந்த வெற்றி ஒட்டு மொத்தமாக தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாக பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத தி.மு.க. இந்த முறை 3 தொகுதிகளில் வென்று இருப்பது மகிழ்ச்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சித்திட்டங்கள்
சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டம் யாருடைய கோட்டை என்பது முக்கியமல்ல. யார் இந்த மண்ணுக்கு அதிகமாக வளர்ச்சித்திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த மாவட்டத்துக்காக ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். மிக வேகமாக வளர்ந்து வரும் ஈரோடு மாநகரம் இன்னும் அதிக வளர்ச்சிகளை எதிர்பார்க்கிறது.
கட்சியில் பதவியில் இருப்பவர்களின் பெயரைச்சொல்லி அவர்களுடன் வலம் வருபவர்கள் செய்த தவறுகளால் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் பலர் பதவி இழந்த அனுபவங்கள் உண்டு.
தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் இது நடந்து இருக்கிறது. எனவே பதவியில் இருப்பவர்கள் தங்களுடன் வருபவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு
2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2. தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. 'உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு: ‘தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல’
‘தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றும், உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பதில் அளித்தார்.
4. தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் - மல்லிகார்ஜுன கார்கே
தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
5. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.