40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 5 May 2021 5:13 PM GMT (Updated: 5 May 2021 5:13 PM GMT)

பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் இதுவரைக்கும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் இதுவரைக்கும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

கொரோனா தடுப்பூசி

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பலருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அதுபோன்று உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. 

எனவே கொரோனா தடுப்பூசி போட பலர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் கூடுவதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் ஏமாற்றம்

பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சிக்கு உட்பட்ட காமாட்சியம்மன் நகர், வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தடுப்பூசி போடவில்லை. 

இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். 

மேலும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி வருவதில்லை. இதனால் முதல் ஊசி போட்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே அதிகாரிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 முதல் 150 பேர் வரைக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி வராததால் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. 

இதுவரைக்கும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23,743 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 3,500 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 2100, ஆனைமலை ஒன்றியத்தில் 2,452 பேருக்கும், கிணத்துக்கடவு தாலுகாவில் 3,949 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 4,300 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மொத்தம் 40 ஆயிரத்து 44 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story