புதிதாக 616 பேருக்கு கொரோனா; ஈரோட்டில் முதியவர் பலி


புதிதாக 616 பேருக்கு கொரோனா; ஈரோட்டில் முதியவர் பலி
x
தினத்தந்தி 5 May 2021 9:21 PM GMT (Updated: 5 May 2021 9:21 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்
616 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மாவட்டத்தில் புதிய உச்சமாக கடந்த 3-ந்தேதி 652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு முதியவர் பலி
இதற்கிடையில் ஈரோட்டை சேர்ந்த 56 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த மாதம் 30-ந் தேதி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 609 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 20 ஆயிரத்து 411 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 437 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story