தஞ்சையில் வணிக நிறுவனங்கள் கடைகள் அடைப்பு


தஞ்சையில் வணிக நிறுவனங்கள் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 May 2021 8:02 PM GMT (Updated: 6 May 2021 8:02 PM GMT)

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, மளிகை. தேனீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன.

தஞ்சாவூர்:
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, மளிகை. தேனீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது தற்போது 300-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
புதிய கட்டுப்பாடுகள்
இதையடுத்து 6-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில் பால். மருந்து கடைகள் மட்டும் முழுமையாக இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மளிகை கடைகள். காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது தேனீர் கடைகளும் மதியம் 12 மணி வரை அதுவும் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஓட்டல்களிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று பால். மருந்து, மளிகை கடைகள். இறைச்சி கடைகளை தவிர இதர வணிக கடைகள். வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் காலை முதலே அடைக்கப்பட்டன. மளிகை கடைகள். காய்கறி கடைகள். இறைச்சிக் கடைகளும் மதியம் 12 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. சில கடைகள் காலை நேரத்தில் திறந்து இருந்தன அவற்றை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடைக்குமாறு கூறினர். அதன்படி உடனடியாக அந்தக் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் போலீசாரும் ரோந்து சுற்றி வந்து கடைகள் அடைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஏமாற்றத்துடன் சென்றனர்
இருந்தாலும் நேற்று வணிக நிறுவனங்கள். வணிக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடைகளின் வழக்கம்போல காலை 9மணிக்கு கடைகளுக்கு வந்திருந்தனர். ஆனால் கடைகள் அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தஞ்சை பர்மா பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடைகளின் உரிமையாளர்கள் கடை முன்பு நின்று இருந்தனர் அப்போது போலீசார் அங்கு வந்து கடைகள் திறக்க அனுமதி இல்லை. எனவே எல்லாரும் கலைந்து செல்லுங்கள் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் மருத்துவக்கல்லூரி சாலை புதிய பஸ் நிலையம், கீழ வாசல், தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆங்காங்கே போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story