பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்  - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 May 2021 10:23 AM GMT (Updated: 7 May 2021 10:23 AM GMT)

வில்லியனூர் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தொழிற்சாலையில் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட ரசாயன புகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட போதிலும் இன்னமும் புகைந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை முற்றிலுமாக அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று பிள்ளையார்குப்பம்-வழுதாவூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story