அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது


அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது
x
தினத்தந்தி 7 May 2021 4:00 PM GMT (Updated: 7 May 2021 4:00 PM GMT)

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனிய நாதன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனிய நாதன் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் பேசும்போது கூறியதாவது:-
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை பொறுத்தவரை இதுவரை 1,714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 447 பேர் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 91 பேர் கொரோனா சிகிச்சை மையத்திலும், 143 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கண்காணிப்புக்குழு 
935 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். 98 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் கீழையூர், நாகை நகர மற்றும் ஊரக பகுதிகள், திருமருகல் ஆகிய இடங்களிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை மயிலாடுதுறை நகரம் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து சீர்காழி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கட்டுப்பாட்டு பகுதிகளை பொறுத்தவரை கீழையூர் பேரூராட்சியில் 4 இடங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளாக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன்  இருப்பு தொடர்பாக கண்காணிப்பதற்காக கூடுதல் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. 4 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. 
ரூ.1½ லட்சம் அபராதம்
இதுதவிர 3 நாட்களுக்கு ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை அறிகுறி இல்லாமல் 47 சதவீத பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 34 சதவீத பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஒருநாளைக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
மக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். 
மக்கள் ஒத்துழைப்பு
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பத்த முடியும். இதுதவிர கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
இதில் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, அரசு மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story