தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு


தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 7 May 2021 4:04 PM GMT (Updated: 7 May 2021 4:04 PM GMT)

தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி:
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
5 கோப்புகளில் கையெழுத்து
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றதும், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கும் திட்டம், சாதாரண கட்டண நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் திட்டம் என்பன உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அரசு அறிவித்துள்ள இந்த திட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
மகிழ்ச்சி
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சுமர்த்தி:- தமிழக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போன்று அத்தியாவசியமான பால் விலை குறைக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் அரசு நிவாரணம் வழங்குவது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்.
வரவேற்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த மைதிலி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு வழங்கப்படும் தொகை ரூ.4 ஆயிரம் என்பதை அதிகரித்து வழங்க வேண்டும். பால் விலை குறைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராதா:- நான் தினமும் டவுன் பஸ்சில் ஏறி பணிக்கு சென்று வருகிறேன். தற்போது டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மிகவும் வரவேற்கிறேன். இதேபோன்று பெண்களின் நலனில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்திருப்பது ஏற்கத்தக்கது.

Next Story