கடலூர், சிதம்பரத்தில் தடையை மீறி திறந்திருந்த 5 கடைகளுக்கு சீல்


கடலூர், சிதம்பரத்தில் தடையை மீறி திறந்திருந்த 5 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 7 May 2021 4:09 PM GMT (Updated: 2021-05-07T21:39:58+05:30)

கடலூர், சிதம்பரத்தில் தடையை மீறி திறந்திருந்த 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடலூர், 

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது காய்கறி, மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், டீக்கடைகளை மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளித்தும் அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இதர அனைத்து வகை கடைகளையும் வருகிற 20-ந் தேதி வரை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, பிற கடைகள் தடையை மீறி திறந்துள்ளதா என போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சீல் வைப்பு

அந்த வகையில் கடலூர் நகராட்சி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கர், அசோகன், சக்திவேல் ஆகியோர் கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் யாரேனும் அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வைத்துள்ளார்களா? என வீதி வீதியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செம்மண்டலத்தில் உள்ள ஒரு செல்போன் கடை தடையை மீறி திறக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளரை எச்சரித்தனர். பின்னர் கடையில் இருந்து ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.

அபராதம்

இதேபோல் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த கோண்டூரில் உள்ள ஒரு கடைக்கும், கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்த ஒரு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத செம்மண்டலத்தில் உள்ள ஒரு பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது புதுநகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரம் பகுதியில் தாசில்தார் ஆனந்த், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி மேற்பார்வையாளர்கள் ராஜாராம், தில்லைநாயகம், சுதாகர், காமராஜ் ஆகியோர் சிதம்பரம் பகுதியில் யாரேனும் அரசின் புதிய கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வைத்துள்ளார்களா? என வீதி வீதியாக சென்று சோதனை மேற்கொண்டனர். உமையாள் சந்து, மேலவீதியில் கடைகள் அரசின் விதிகளை மீறி திறந்திருந்தன. இதையடுத்து அந்த கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story